தீவுகளைக் காக்கப் பனைகளை வளர்ப்போம்.! பிரதமர் மோடி பேச்சு

0 4198

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மூழ்கும் அபாயமுள்ள சிறு தீவுகளையும், கடலோரப் பகுதிகளையும் காக்க அங்குப் பனைகளை வளர்த்து வருவதைப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் எடுத்துரைத்துள்ளார். 

மனத்தின் குரல் என்னும் பெயரில் 83ஆவது முறையாக வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மரங்களை வளர்த்து இயற்கையை நாம் காத்தால் அவை நம்மைக் காக்கும் என்றும், இது தன் வாழ்வில் கண்ட அனுபவம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இயற்கையைக் காப்பதற்குத் தூத்துக்குடி மாவட்ட மக்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். பனைகளை வளர்த்தால் அவற்றை அழிவில் இருந்து காக்கலாம் என்பதைக் கண்டுகொண்ட மக்களும் சூழலியல் வல்லுநர்களும், கடலோரத்திலும், தீவுகளிலும் இப்போது பனைகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பனைகள் புயல்கள், சூறாவளிகள் ஆகியவற்றின்போது கூட உறுதியாக நின்று மண்ணரிப்பைத் தடுப்பதால் இப்பகுதிகளைக் காப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இயற்கையின் சமநிலையை நாம் சீர்குலைக்கும் போது அல்லது அதன் புனிதத்தை அழிக்கும்போது மட்டுமே இயற்கை நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இயற்கை நம்மை ஒரு தாயைப் போல வளர்த்து, நம் உலகத்தை வண்ணமயமாக்குவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்றும், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நம்மையும், நம் அன்புக்குரியோரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுவதே தமது இலக்கு என்றும், அரசின் திட்டங்களால் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவது தமக்கு மனநிறைவை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments