கண்ணை கட்டி கராத்தே பயிற்சியில் பாலியல் சேட்டை..! பள்ளி தாளாளர் கைது

0 8451

பள்ளியில் கராத்தே பயிற்சியின் போது மாணவிகளின் கண்ணை கட்டிவிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவமானத்திற்குள்ளான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில், பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பள்ளி தாளாளர் மற்றும் கராத்தே பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கருமந்துறை அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் ராஜா என்ற கராத்தே மாஸ்டர் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கொடுத்து வந்தார். அந்த மாணவியும் கராத்தே பயிற்சிக்கு சென்று வந்தார்.

ஒருநாள் மாணவி பயிற்சியில் ஈடுபட்ட போது, மாணவிகள் அனைவருக்கும் கராத்தே மாஸ்டர் ராஜா கண்களை துணியால் கட்டி விட்டு பின்னர் பயிற்சி கொடுத்தார் . அப்போது மாணவியிடம் கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து அந்த மாணவி பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடமும் தெரிவித்தார். அப்போது பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவியை மிரட்டி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இதன் பின்னர் மாணவி மன ரீதியாக கடுமையான அழுத்தத்திற்குள்ளானதோடு, வெளியே சொல்ல இயலாமல் தவித்து வந்தார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர் ராஜா அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் , அவனை பார்க்கும் போதெல்லாம் மன உளைச்சலால் தவித்து வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை எப்படி வெளியில் சொல்வது ? என தெரியாமல் குழப்பத்தில் கடந்த 22ஆம் தேதி வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

உடனடியாக மாணவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெற்றோர் மற்றும் அவர்களது கிராம மக்கள் கருமந்துறை போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் மாணவியின் உறவினர்கள் மற்றும் மலைக்கிராம மக்கள் திரளாக கருமந்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் வழக்கை விசாரிக்க வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமிக்கு உத்தரவிட்டார். உடனடியாக கருமந்துறைக்கு விரைந்து சென்று டிஎஸ்பி விசாரணை நடத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட மாணவி கராத்தே பயிற்சிக்கு செல்லும் போது, கண்ணை துணியால் கட்டிவிட்டு கராத்தே பயிற்சியாளர் ராஜா தொடர்ச்சியாக இத்தகைய பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.

இதையடுத்து கராத்தே மாஸ்டர் ராஜா அவரது அத்துமீறலை கண்டிக்க தவறிய பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஏராளமான மாணவிகள், இவர்களால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், இருவரிடமும் காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் சம்பந்தப்பட்ட சிறுமிகள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments