லாரி கடத்தல், Ex மந்திரி மகன் முந்திரி திருடனானான்..! சினிமா பாணியில் பரபர சேசிங்.!
தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி பருப்பு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி ஓட்டுனருடன் கடத்திச்சென்ற முன்னாள் மந்திரி மகன் தலைமையிலான கொள்ளை கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அடிக்கடி ஆபாச படங்களில் மாட்டிக்கொண்ட மந்திரி மகன், இந்த முறை பேன்ஸி காரில் சென்று கொள்ளை சம்பவத்தில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 12 டன் முந்திரி பருப்பு பெட்டிகளை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது.
அந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி வந்த நிலையில், லாரி நெல்லை கே.டி.சி நகரை கடந்த போது 5555 என்ற பேன்ஸி எண் கொண்ட ரெனால்ட் டிரிப்பர் கார் ஒன்று அந்த லாரியை பின் தொடந்து வந்துள்ளது.
இதனை கண்ட லாரி ஓட்டுனர் ஹரி , செல்போன் மூலம் லாரி உரிமையாளரரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இரவில் தனியாக லாரி ஓட்டிவந்ததால் தூக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவர், நண்பரிடம் ஹெல்செட் போட்டு செல்போனில் பேசிக் கொண்டே வந்துள்ளார். புதுக்கோட்டை அருகே அந்த லாரியை காரில் வந்த கும்பல் மடக்கி உள்ளது. ஓட்டுனர் வாயில் மதுவை ஊற்றி கண்ணை கட்டி காரில் தூக்கிப்போட்டுள்ளனர். முந்திரி லோடுடன் லாரியை கொள்ளை கும்பல் கடத்திச்சென்றது. இதையடுத்து லாரி உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி சந்தீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, கடத்தப்பட்ட லாரியுடன் , குறிப்பிட்ட பேன்ஸி நம்பர் கொண்ட காரும் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரின் பேன்ஸி எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த கார் அதிமுகவின் முன்னாள் மந்திரி செல்லப்பாண்டியனின் மகன் ஜெயசிங்கிற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
ஒவ்வொரு சுங்கச்சாவடியாக ஆய்வு செய்த போலீசார் இறுதியில் பரமத்திவேலூர் சுங்கசாவடியை தாண்டிய பின்னர் அங்குள்ள ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதியில் நிறுத்தி வைத்திருந்த லாரியை மீட்டு தூத்துக்குடி கொண்டு வந்தனர். மந்திரி மகன் ஜெபசிங்கின் செல்போன் சிக்னலை வைத்து முந்திரி கொள்ளையர்களையும் சுற்றிவளைத்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
முந்திரி கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் மந்திரி மகன் தலைமையிலான கொள்ளைக் கும்பலை சினிமாபாணியில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுற்றிவளைத்த தனிப்படையினரை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அண்மையில் நடந்த தூத்துக்குடி நாசரேத் தென்னிந்திய திருச்சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெபசிங் எப்போதும் சில கையாட்களுடன் வலம் வருவதை வாடிக்கையாக்கினார். இந்த நிலையில் அவரை சந்தித்த செந்தில் முருகன், விஷ்ணு பெருமாள் ஆகியோர் ஒன்றரை கோடி மதிப்புள்ள முந்திரி லோடு பாதுகாப்பில்லாமல் துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் தகவலை தெரிவித்துள்ளனர்.
தன்னை ஒரு டான் போல நினைத்துக் கொண்ட ஜெபசிங், அதனை கடத்திச்செல்வதற்கு ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறி கூலிக்கு ஆட்களை ஏற்பாடு செய்து இந்த முந்திரி லாரி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்பெல்லாம் அவ்வப்போது ஆபாச படங்களுடன் சிக்கி சமூக வலைதளங்களில் அசிங்கப்படுவதை வழக்கமாக வைத்திருந்த ஜெபசிங்கின் நடவடிக்கைகளால் , கடுமையான மன உளைச்சலுக்குள்ளான முன்னாள் மந்திரி செல்ல பாண்டியன், தனது மகன் ஒரு ஊதாரி என்றும் அவனது பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கும், முறையற்ற நடவடிக்கைகளுக்கும் எந்தவகையிலும் தான் பொறுப்பேற்க மாட்டேன் என்று கூறி கடந்த ஆண்டே செய்திதாளில் விளம்பரம் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments