தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஓமிக்ரான் என பெயரிடப்பட்ட வைரஸ் காரணமாக, பல நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கு பயணத் தடையை விதித்துள்ளன.
உலகம் முழுவதையும் ஆட்டுவித்துள்ள கொரோனா வைரஸ் உருமாறி, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களாகத் தொடர்ந்து பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய வகை வைரசுக்கு B.1.1.529 என்ற அடையாள குறியீடு வழங்கப்பட்டது. இந்த வைரசுக்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இதுவரை வந்த உருமாற்றங்களில் இந்த வைரஸ், அதிகமான உருமாற்றத் தன்மையுடையதாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் கணிக்கின்றனர்.
முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் இது அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் கொரோனாவின் அடுத்த அலைக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 9ந் தேதி போட்ஸ்வானாவில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் இது தெரிய வந்ததாகவும், அதே சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தென்னாப்பிரிக்காவில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்ஸ்வானாவில் 4 பேரும், ஹாங்காங்கில் 2 பேரும், பெல்ஜியம், இஸ்ரேல், டென்மார்க்கில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியுள்ளதால் இது வீரியம் மிகுந்ததாகக் கருதப்படுகிறது.
உருமாற்றமடைந்த வைரஸ் குறித்து, தென்னாப்பிரிக்கா அளித்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் என பெயரிட்டதுடன், கவலையை ஏற்படுத்தக்கூடிய உருமாற்றம் எனகணித்துள்ளது.
கொரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துமா, பரவும் போது மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது குறித்த ஆய்வு நிறைவடைய மேலும் பல வாரங்கள் ஆகும் என்றும் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய வைரஸ் அதிகமான அளவில் உருமாற்றம் அடையக்கூடும் என்று முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது, அதேநேரம், பரவுவதும் அதிவேகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Comments