தீவிரமடைந்த வடகிழக்கு பருவ மழை.. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கையாக இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை சனிக்கிழமை கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வரும் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அம்மையம், வரும் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
வரும் 29ஆம் தேதியன்று தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நாளைவரை சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments