இந்தியாவை ஒருங்கிணைக்கும் அரசியலைப்பு.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..!
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அரசியலமைப்பு ஒருங்கிணைப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, குடும்ப அரசியல் நமது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. 1949ஆம் ஆண்டில் இதே நாளில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அரசியலைமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு தடைகளை மீறி நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டதாகவும், பன்முகத்தன்மைக் கொண்ட நமது நாட்டை அரசியலமைப்பு ஒருங்கிணைப்பதாகவும் குறிப்பிட்டார்.
நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமின்றி, பெரும் பாரம்பரியம் கொண்டது என பேசிய பிரதமர், அதன் மீதான தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
மேலும், இந்திய ஜனநாயகத்திற்கு குடும்ப அரசியலே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக பேசிய பிரதமர், அப்படிப்பட்ட கட்சிகள் எவ்வாறு அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்கும்? என எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
2008ஆம் ஆண்டில் இதே நாளில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த நாள் துக்க தினம் என்றும், தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களை வணங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் திறமையான எதிர்க்கட்சிகள் இல்லெயெனில் ஜனநாயகத்தின் பலன் கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குடிமக்களின் நலனிற்காக வேறுபாடுகளை களைந்து அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Comments