நெஞ்சுவலி காரணமாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான ஹசாரே, 2011-ல் ஊழல் தடுப்பு இயக்கத்தை தொடங்கி நடத்தியவர்.
நாட்டில் ஊழலுக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வரக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 2011 ஏப்ரலில், 12 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, நாடெங்கும் மக்களின் கவனத்தை பெற்றவர் அன்னா ஹசாரே.
மகாராஷ்டிராவில் உள்ள ரேலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வந்த அவருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹசாரேவின் உடல்நிலை சீராக இருப்பதாவும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அவ்தத் பொடம்வாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அன்னா ஹசாரே விரைவில் குணமடைய, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments