கழிவு நீர் குழாயில் கொட்டிய கரண்சி நோட்டுக் கட்டுக்கள்... லஞ்சப் பணம் ரூ 54 லட்சம்பே..!
லஞ்சப்பணத்தை கழிவுநீர்க் குழாய்க்குள் மறைத்து வைத்த கில்லாடி பொதுப்பணித்துறைப் பொறியாளர் கையும் களவுமாக சிக்கினார். கட்டி கட்டியாகத் தங்கமும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களும் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவிவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
வீட்டில் கழிவு நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் குழாய்க்குள் பாம்பு புகுந்து விட்டதோ என்று எண்ண வேண்டாம், லட்சக்கணக்கில், பெற்ற லஞ்சப்பணம் குழாய்க்குள் மறைத்து வைக்கப்பட்டதால் அதனை மீட்க அதிகாரிகள் எடுத்த அதிரடிக் காட்சிகள் தான் இவை..!
கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் வீடுகள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளரான சாந்தகவுடா என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது, கழிவுநீர் குழாய் தண்ணீர் இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது.
சந்தேகமடைந்த அதிகாரிகள் பிளம்பரை வரவழைத்து பைப்பை அறுத்துள்ளனர். அப்போது, கட்டுக்கட்டாக பணம் வந்து விழுந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.பைப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பிளாஸ்டிக் குழாய்க்குள் இருந்து பக்கெட்டை வைத்து பிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் 54 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 14 கிலோ தங்க கட்டிகளும், ஏராளமான தங்க ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டது.இந்த சோதனையில் 3 கார்கள், ஒரு பள்ளி பேருந்து, 2 டிராக்டர்கள், 36 ஏக்கர் நில ஆவணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாந்தகவுடா பலரிடம் ரொக்கமாக பெற்ற லஞ்ச பணத்தை பதுக்குவதற்காகவே கழிவு நீர் குழாய் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் இணைப்புக் கொடுக்காமல் விட்டு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments