தமிழ்நாட்டில் மழை வெள்ளச் சேதங்களைச் சீரமைக்க 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் வழங்கவேண்டும்... மத்தியக் குழுவிடம் வலியுறுத்திய தமிழக அரசு!
தமிழ்நாட்டில் மழை வெள்ளச் சேதங்களைச் சீரமைக்க 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று மத்தியக் குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புகளை, மத்திய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர், மழை பாதிப்பு கணக்கெடுப்பு தொடர்பாகவும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் போது மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிய உடனடி நிவாரணத் தொகையான 550 கோடி ரூபாயும், மறு சீரமைப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 79 கோடியும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கபட்ட பின்னர் கூடுதலாக ஏற்பட்ட சேத விபரங்களின்படி முதற்கட்ட அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 549 கோடி ரூபாயும், தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 521 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
தற்காலிகச் சீரமைப்புக்காக ஆயிரத்து 70 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்புக்காக 3 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் வழங்கவேண்டும் என கோரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments