ஜெ. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது -சென்னை உயர்நீதிமன்றம்

0 4955

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் வீட்டை மூன்று வாரங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அதை அரசுடைமை ஆக்கி, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சேஷசாயி, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கிய உத்தரவு செல்லாது எனக் கூறி அதை ரத்து செய்தார். ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் மூன்று வாரத்துக்குள் வீட்டை ஒப்படைக்கவும், இழப்பீடு வழங்க நீதிமன்றத்தில் செலுத்திய 67 கோடியே 90 இலட்ச ரூபாயைத் திரும்பப் பெற்று அரசின் கருவூலத்தில் செலுத்தவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி 36 கோடியே 87 இலட்ச ரூபாயைப் பெற வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். 

அதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.அந்த இல்லத்துக்கு 67 கோடியே 90 இலட்ச ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்ததை எதிர்த்தும் வழக்குத் தொடுத்தனர்.

ஏற்கெனவே 80 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்துள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அதைக் கையகப்படுத்துவதில் எந்தப் பொதுப் பயன்பாடும் உள்ளதாகக் கருத முடியாது எனத் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

எகிப்தில் பாரோ ஆட்சியாளர்கள் பிரமிடுகளைக் கட்டியதையும், முகலாயப் பேரரசர் ஷாஜகான் தாஜ்மகால் கட்டியதையும் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது இந்தியா எகிப்து ஆட்சியாளர்களிடமோ, முகலாயப் பேரரசர்களிடமோ இல்லை எனவும், மக்களுக்குச் சொந்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சொத்தைக் கையகப்படுத்துமுன் தொடர்புடையோருக்கு 60 நாளுக்கு முன் தெரிவிக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேதா நிலையத்துக்கு உரிமையுள்ள யாருமே இல்லை என்ற ரீதியில் அரசு தானே அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் நீதிபதி தனது  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசியல் தலைமையையும், சொத்தின் உரிமையையும் பிரித்துப் பார்க்கத் தவறிவிட்டதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments