தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்.. மத்திய குழுவினர் ஆய்வு

0 2137
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களை உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களை உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். 

வடகிழக்கு பருவமழையினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சீர்காழி அருகே உள்ள புத்தூர் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடைந்த மத்திய குழுவினர், அங்கு பயிர் சேதம் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பயிர் சேதம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். குகயநல்லூர் பகுதியில் பயிர் சேதங்கள் மற்றும் சேதமடைந்த குடிசை வீடுகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேல்பாடி தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்ததை பார்வையிட்டனர்.

பொன்னை தடுப்பணை, பொன்னை பாலம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். காமராஜபுரம் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க கோரி எம்.பி. கதிர் ஆனந்த் மத்திய குழுவிடம் மனு வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டனர். மத்திய குழுவிடம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் பாதிப்புகள் குறித்து விளக்கினார். புதுசத்திரம் அடுத்த பூவாளை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள் ஆகியவற்றை பார்வையிட்ட மத்திய குழுவினர், நகரப்பகுதியில் உள்ள இந்திரா காந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளை ஆய்வு செய்தனர். பாகூர் பகுதியில் விளைநிலங்களை பார்வையிட சென்ற மத்திய குழுவினரை முற்றுகையிட்ட விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அதிகாரிகள் யாரும் பயிர்களை வந்து பார்க்கவில்லை என குற்றம்சாட்டினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை,  உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.  பாப்பாக்கோவில் பகுதியில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த பயிர்சேத  புகைப்படக் காட்சிகளை பார்வையிட்டனர்.  விவசாயிகள் பாதிப்புக்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்தியக் குழுவினரிடம் வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments