கரூரில் ஆர்.டி.ஓ. ஆய்வாளர் உயிரிழப்பு.. விபத்தை ஏற்படுத்திய வாகனம் சிக்கியது..!
கரூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ், வேன் மோதி உயிரிழந்த வழக்கில், மோதிவிட்டு நிற்காமல் சென்ற மகிந்திரா மேக்ஸி கேப் வேனை கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்கப் பிரிவில் மோட்டார் வாகன தணிக்கை ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கனகராஜ் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஹிந்திரா மேக்சி கேப் வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.
வேனை நிறுத்தி தணிக்கை செய்வதற்காக எதிரே நின்று சைகை காண்பித்துள்ளார் கனகராஜ். ஆனால், அவர்மீது மோதிய வேன் நிற்காமல் சென்றுவிட்டது. வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்ட கனகராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் மீது மோதிய வேன், டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்களை அழைத்து வரும் வேன் என்பது தெரியவந்த நிலையில், அடுத்தக் கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் வேன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த போலீசார், அதன் பதிவு எண்ணைக் கொண்டு தோகைமலை அடுத்த கழுகூரில் வேனை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிய உரிமையாளர் சுரேஷ்குமாரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Comments