எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு.. சிறார்கள் உட்பட மூவர் கைது..!
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 3 பேரில் ஒருவன் 4ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்றும் மற்றொருவன் 9ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்றும் கூறப்படும் நிலையில், போதைக்கு அடிமையாகி, அதற்காக ஆடுகளைத் திருடி வந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சனிக்கிழமை நள்ளிரவு பூலாங்குடி காலனி பகுதியில் ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற போது, அந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையை சேர்ந்த மணிகண்டன் என்ற 19 வயது இளைஞனும் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களில் ஒருவன் நான்காம் வகுப்பும் மற்றொரு சிறுவன் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான மணிகண்டன், போதைக்காகவே ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின்போது 3 பேரையும் விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், சக காவலர்களை சம்பவ இடத்துக்கு வருமாறு போனில் அழைத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுவர்கள், போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது முதுகுப் பக்கம் இருந்து வெட்டியிருக்கலாம் என திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் தெரிவித்தார். முன்பக்கம் இருந்து தாக்கி இருந்தால், எஸ்.எஸ்.ஐயால் தடுத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இரவு நேர ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.ஐ.ஜி சரவண சுந்தர் தெரிவித்தார் .
Comments