அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது.. குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பு..!
பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதினை வழங்கினார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீர தீர செயல்களில் ஈடுபட்டோருக்கான வீர்சக்ரா, கீர்த்தி சக்ரா, சவுரிய சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் புல்வாமாவில் 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றபோது வீர மரணமடைந்த மேஜர் விபூதி ஷங்கருக்கு சவுரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை அவரது மனைவி லெப்டினென்ட் நிகிதா கவுல், தாயார் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பெற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது முக்கிய தீவிரவாதியை சுட்டுக்கொன்று தன்னுயிர் இழந்த நைப் சுபேதார் சோம்பிருக்கு அறிவிக்கப்பட்ட சவுரிய சக்ரா விருதினை, அவரது மனைவி, தாயார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
2018ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையின்போது தீவிரவாதிகளை வீழ்த்திவிட்டு வீரமரணமடைந்த பிரகாஷ் ஜாதவிற்கு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதினை அவரது மனைவி மற்றும் தாயார் பெற்றுக்கொண்டனர்.
2019ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை க்ரூப் கேப்டன் அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதினை வழங்கினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார். இத்தாக்குதலின்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்த நிலையில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனை அடுத்து, பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்ற விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்ட நிலையில், அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும், விங் கமாண்டராக இருந்த அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
Comments