இரு குழுக்களாகச் சென்று தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்ய உள்ள மத்தியக் குழுவினர்!

0 1916

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழுவினர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரு குழுக்களாகச் சென்று சேத விவரங்களை இன்று பார்வையிடுகின்றனர்.

தமிழகத்தில் கடந்தவாரம் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் சேதமடைந்தன.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழுவினர் இன்றும், நாளையும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 11 மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன்படி இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது.நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மற்றொரு குழுவும் செல்ல உள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோரும் இந்தக்குழுவுடன் செல்கின்றனர். 24-ஆம் தேதியன்று மத்திய குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

முன்னதாக சென்னை வந்த மத்தியக் குழுவினர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments