கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்தடைந்த மத்திய குழுவினர்!
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது முதலே கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்தது. இதனால் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதனை அடுத்து, வெள்ள சேத விவரங்கள் கொண்ட அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக 2 ஆயிரத்து 79 கோடி ரூபாய் கோரப்பட்ட நிலையில், முதற்கட்டமாக உடனடியாக 550 கோடி ரூபாயும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு, சென்னை வந்தனர்.
இந்த குழு தனித்தனியாக சென்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 11 மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் படி நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குழுவும் நாளை ஆய்வு செய்ய உள்ளது. மேலும், நாளை மறுநாள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மற்றொரு குழுவும் செல்ல உள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து குழுவை வழிநடத்தி செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, ஆய்வுகளை நிறைவு செய்து வருகிற 24-ஆம் தேதியன்று மத்திய குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் சென்னை வந்த மத்தியக் குழுவினர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்துறை செயளாலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதிகள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Comments