எஸ்.எஸ்.ஐ. நடுரோட்டில் படுகொலை... ஆடு திருட்டு கும்பல் அட்டூழியம்!
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 1995ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த பூமிநாதன், திருவெறும்பூர் அருகே சோழமாநகரில் மனைவி, மகன் என குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றிரவு பூமிநாதனும், நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலரும் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மர்ம கும்பல் ஒன்று ஆடுகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட பூமிநாதனும், மற்றொரு காவலரும் கும்பலிடம் சென்று விசாரித்த நிலையில், அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது. உடனடியாக, திருட்டு கும்பலை பிடிக்க பூமிநாதனும், மற்றொரு காவலரும் தனித்தனி பைக்கில் விரட்டிச் சென்ற நிலையில், அந்த காவலர் வழிதவறி செல்ல, பூமிநாதன் திருட்டு கும்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கிறார்.
திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோட்டில், களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் ஒரு பைக்கை மடக்கி பிடித்து அதிலிருந்த 2 பேரை பிடித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து, மற்ற இரண்டு பைக்குகளில் இருந்த கும்பல், பிடிபட்ட இருவரையும் விடுவிக்குமாறு கூறி மிரட்டிய நிலையில், அதற்கு பூமிநாதன் மறுத்துவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மறைந்து வைத்திருந்த ஆயுதங்களை வைத்து, நடு ரோட்டிலேயே சரமாரியாக வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
காலையில் அந்த சாலை வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் சடலத்தை கண்டு, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திக்கேயன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, கொலை கும்பல் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.மேலும், கொலை கும்பலை பிடிக்க, மொத்தமாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ.பூமிநாதனின் உடல் சோழமாநகரிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய பின்னர், 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments