தோனியின் ரசிகனாக சிஎஸ்கே பாராட்டு விழாவில் பங்கேற்றிருக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தோனி தமிழ்நாட்டில் ஒருவராக மாறியிருப்பதாக புகழாரம் சூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அணி கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7-ம் எண் பொறித்த சிஎஸ்கே ஜெர்சியை தோனி வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய தோனி, சென்னையும் தமிழ்நாடும் தனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது என தெரிவித்தார்.
தன்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என தெரிவித்த அவர், அது அடுத்த ஆண்டிலா அல்லது 5 ஆண்டுகளிலா என தெரியவில்லை என குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், தமிழர்கள் பச்சை தமிழர் என்றால்; தோனி மஞ்சள் தமிழர் என்றும் தெரிவித்தார். மேலும், இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்தமுடியாது, இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
Comments