அமெரிக்க வரலாற்றிலேயே அதிபரின் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற கமலா ஹாரிஸ்
அமெரிக்க வரலாற்றிலேயே அதிபரின் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டபோது அவரது அதிபர் அதிகாரம் கமலா ஹாரிஸுக்கு சிறிது நேரம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், 85 நிமிடங்களுக்கு அதிபர் பொறுப்பில் இருந்தார்.
அந்த சமயத்தில் பைடனுக்கு கொலோனோஸ்கோபி என்ற பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டிருந்தது. மேலும், அதிபர் பொறுப்பிலிருந்த கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்கு வளாகத்தில் உள்ள தன் அலுவலகத்திலிருந்து கொண்டே, அதிபர் பொறுப்புக்கான பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தனது கடமைகளைச் செய்யும் திறனோடு உள்ளதாகவும் பைடனின் மருத்துவர் அறிக்கை வெளியிட்டார்.
Comments