2 ஆறுகளில் வெள்ளம்.. தத்தளிக்கும் கடலூர்..!

0 3358
2 ஆறுகளில் வெள்ளம்.. தத்தளிக்கும் கடலூர்..!

கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள நீர் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அணையின் நீர்மட்டம் 99 அடியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததாலும் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. ஆற்றின் இருகரைகளிலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தென்பெண்ணையின் கழிமுகப் பகுதியான கடலூரில் ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் பாய்வதால் நகரின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஐம்பதுக்கு மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

கடலூரையும் புதுச்சேரியையும் இணைக்கும் பெரிய கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, மருதாடு, நெல்லிக்குப்பம் சாலைகள் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்தத் தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் அறைகலன்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மின்கருவிகள், மின்னணுக் கருவிகள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

 

கடலூரின் வடபுறம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப் பாதிப்பு என்றால், தென்புறத்தில் கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரமுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments