கார்த்திகை தீபத் திருவிழா ; திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்சபூதத் தலங்களுள் அக்னித்தலமாக பக்தர்கள் வழிபடும் இடம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்திதரக் கூடிய இத்திருத்தலத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஒளிவடிவானவன் இறைவன் என்பார்கள் சிவனடியார்கள். கார்த்திகை மாதத்தில்தான், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவபெருமான் ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்..
கார்த்திகை மாதத்தில், கிருத்திகை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளான இன்று, நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் வீடுகளில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் தீபத்தை, தீபத்திருநாளான இன்று தரிசிப்பதே சிறப்பு என்பார்கள் சிவபக்தர்கள்.
அண்ணாமலையார் கோவிலிலுள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் மஹா தீப வடிவத்தில் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். அப்போது "அண்ணாமலையாருக்கு" அரோகரா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.
Comments