பிரதமரின் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு விவசாயிகள் கொண்டாட்டம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி காசிப்பூரில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் பிரதமர் மோடியின் அறிவிப்பை அறிந்ததும் விவசாயிகளுக்கு வெற்றி என முழக்கமிட்டனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் விடுத்துள்ள செய்தியில், போராட்டம் திரும்பப் பெறப்படாது என்றும், புதிய வேளாண் சட்டங்கள் கைவிடப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கும் வரை பொறுத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தவிர விவசாயிகளின் மற்ற சிக்கல்கள் குறித்தும் அரசு பேச்சு நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் முடிவை வரவேற்பதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை பொறுத்திருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்படி நிகழ்ந்தால் அது விவசாயிகளின் ஓராண்டுக்காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments