3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பிரதமர் மோடி அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, குளிர்கால கூட்டத்தொடரில் அந்த சட்டங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு சேவை செய்வதே மத்திய அரசின் முக்கிய இலக்கு என்றும் சிறு விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாகவே உள்ள நிலையில், 2014ஆம் ஆண்டு முதலே விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது சரியான விலை கிடைப்பதாக தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் வேளாண் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதாகவும், வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தரமான விதைகள், உரங்கள், பயிர் காப்பீடு ஆகியவை விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்தததாக தெரிவித்த பிரதமர், விவசாயிகள் நலனுக்காகவும், அவர்களை மேம்படுத்தவும், நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில், சிறு விவசாயிகளை முன்னேற்றவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் இந்த 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் எவ்வளவோ முயன்றும், சில விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்களைப் பற்றியும், அதன் நன்மைகளையும் புரியவைக்க முடியவில்லை என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
இதனை அடுத்து, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் குருநானக் பிறந்த நாளில் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவரவர் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான சட்ட ரீதியான செயல்பாடுகள் தொடங்கும் என தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதனை அடுத்து, நமது தேசத்தின் கனவுகள் நனவாகும் வகையில், இன்னும் கடினமாக உழைப்பேன் என உறுதியளிப்பதாகவும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Comments