நாகை, கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு, மழை பொழியும் சூழல் நிலவுகிறது என்பதை குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
மேலும், துறைமுகத்தில் இருக்கும் படகுகள், கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்குள் ஒரு புயல் உருவாவதற்கான வானிலை சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கும் வகையிலும், கடலுக்குள் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
Comments