காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கரையைக் கடக்கும்!
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரை இடையே, சென்னைக்கு அருகே நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட தமிழக கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Comments