இன்னோவோ காரில் வந்து வீடு வீடாக ஆடு திருடிய களவாணிகள்..! மட்டன் ஸ்டால் அதிபர் சிக்கினார்

0 10164

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னோவா காரில் சென்று ஆடுகளை களவாடி, மட்டன் ஸ்டால் நடத்திய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விஐபி போல சொகுசு காரில் சென்று ஆடு திருடியவர்கள் அகப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டின் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைபேசி விற்கப்படுவதால் ஆடு வளர்ப்பது செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறி வருவதால் அங்குள்ள கிராம புறங்களில் ஏராளமான வீடுகளில் ஆடு வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக் கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆடுகள் தொடர்ச்சியாக திருடு போவது குறித்து ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை ஒன்றை அமைத்து ஆடு களவானிகளை தேடி வந்தனர். தனிப்படையினர் ஆடுகள் திருடு போன பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அபோது இன்னோவா கார்களில் விஐபி போல வலம் வரும் மர்ம ஆசாமிகளை ஆடுகளை திருடி அந்த காரில் ஏற்றிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது

இதையடுத்து வேம்பார் சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த செல்வராஜ், காரைக்குடி ஆறுமுகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து சொகுசு கார்களில் ஊருக்குள் புகுந்து ஆடுகளை களவாடி கார்களில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

ஆடு களவாணிகளான செல்வராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 இன்னோவா கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் இருவரும் தாங்கள் திருடும் ஆடுகளை, காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் மட்டன் கடை நடத்தி வரும் முகம்மது அராபத் மற்றும் ஆசிக் ஆகிய இருவரிடம் கொண்டு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. முகம்மது அராபத், பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஒரு குழுவாகவும், ஆசிக்,செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேர் ஒரு குழுவாகவும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதியில் இருந்து ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.

இந்த கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 20 இடங்களில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் மேற்படி மற்ற நபர்களில் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளதால் இந்த கும்பல் தனி குழுவாக ஆடுகளை திருடி மட்டன் கடை நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. திருடு போன ஆடுகளை மீட்ட விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

திருடிய ஆடுகளை காரில் ஏற்றிச்செல்லும் போது ஆடுகள் கத்தாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் டேப்பினை கொண்டு ஆடுகளின் வாயில் ஓட்டி கட்டியுள்ளனர். ஆடுகளை திருடி இறைச்சிகடைகளில் விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த இந்த கும்பல், சிசிடிவி காட்சியின் மூலம் போலீசில் சிக்கியதால் தற்போது கம்பி எண்ணி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments