மதுபானக்கடையை அடித்து நொறுக்கிய விவகாரம் ; வீட்டின் ஓடுகளை பிரித்து சென்று பெண்களை கைது செய்த போலீஸ்

0 4045
வீட்டின் ஒடுகளை பிரித்து சென்று பெண்களை கைது செய்த போலீஸ்

கர்நாடகாவில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபானக்கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து சிறுமி உள்ளிட்ட 6 பெண்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கமகளூரு மாவட்டம் முஸ்லாம்புரா என்ற கிராமத்தில் தனிநபர் நடத்தும் மதுபானக்கடையால் கணவர்கள் வேலைக்கு செல்லாமல் மது அருந்துவது மற்றும் மதுபானக்கடை வழியாக நடந்து செல்லும் இளம்பெண்களை சீண்டுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுபானக்கடையை அகற்றக்கோரி, மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், பெண்கள் மதுபானக்கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கடையை அகற்றும்படி கோஷமிட்டனர்.

அவர்களை மதுபான கடை உரிமையாளரும் அவரது குண்டர்களும் தாக்கியதில் 6 பெண்கள் காயமடைந்தனர். இதையடுத்து பெண்கள், அப்பகுதி இளைஞர்களுடன் ஒன்று திரண்டு மதுபானக்கடையை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வந்த கடூர் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் வாசலை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இரவு நேரம் என்றும் பார்க்காமல் அந்த வீட்டின் ஓடுகளைப் பிரித்து உள்ளே நுழைந்த போலீசார் அங்கிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பெண்களையும் கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments