வெள்ள நிவாரணம் அறிவிப்பு... ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு.. சாலைகள், வடிகால்களுக்கு ரூ.300கோடி..!
தமிழகம் முழுவதும் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெற்பயிர்கள் சேதமடைந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்கள், கன்னியாகுமரியில் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், மொத்தமாக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 68ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில், குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த முதலமைச்சர், நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், மறு சாகுபடி செய்திட ஏதுவாக 1485 ரூபாய்க்கு 45 கிலோ குறுகிய கால விதை நெல்லும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களில் ஏற்படும் மஞ்சள் நோயை தடுத்திட 1235 ரூபாய்க்கு 25 கிலோ நுண்ணூட்ட உரமும், 354 ரூபாய்க்கு 60 கிலோ யூரியாவும் 2,964 ரூபாய்க்கு 125 கிலோ டி.ஏ.பி. உரமும் இடுபொருட்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய 300 கோடி ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments