பழுதான காரை சரிசெய்யும்போது பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே தீப்பிடித்து எரிந்த கார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெட்ரோல் காரில் தவறுதலாக டீசல் நிரப்பட்ட நிலையில், பழுதான காரை சரி செய்துகொண்டிருந்தபோது பெட்ரோல் நிலைய வளாகத்திலேயே தீப்பிடித்து எரிந்தது.
உஞ்சனையில் இருந்து பாண்டியன் என்பவர் தனது ஹோண்டா அமேஸ் காரில் தேவகோட்டை சென்றுள்ளார். நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சின்னப்பன் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளார். டேங்க் நிரம்பியதும் காரை கிளப்ப முயன்றபோது அது கிளம்பாததால், மெக்கானிக்கை வரவழைத்துள்ளனர்.
அப்போதுதான் காரில் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலை நிரப்பியது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. மெக்கானிக் காரை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும்போதே அது திடீரென தீப்பிடித்துள்ளது.
பங்க் ஊழியர்கள் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து கருகிப் போனது.
Comments