பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை.. தேடப்பட்ட பள்ளி முதல்வர் கைது... தொடரும் விசாரணை

0 18303

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சின்மயா வித்யாலயா பள்ளியின் முன்னாள் முதல்வரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற அந்த மாணவிக்கு, அங்கு இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வக்கிரபுத்தி கொண்ட அந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவிலும் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இந்த நிலையில், ஆசிரியரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி ஏற்கனவே சின்மயா பள்ளியின் முதல்வராக இருந்த மீரா ஜாக்சனிடம் புகாரளித்ததாகவும், ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்தததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்யக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் வலுத்தது. இதனையடுத்து, பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்து 3 நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, மாணவியின் பெற்றோரை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், செந்தில்பாலாஜியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவோம் எனவும் கூறினார். மாணவிகள் தங்கள் பயிலும் பள்ளிகளில் பாலியல் ரீதியாக ஏதேனும் துன்புறுத்தலை எதிர்கொண்டால், 14417 என்ற உதவி எண்ணில் புகாரளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சின்மயா பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனிடம் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துணை ஆணையர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது வேறு மாணவிகள் யாரேனும் புகார் அளித்தார்களா?, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகாரளிக்க பள்ளியில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறதா? தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள பெயர்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments