12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்... முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வரும் தனிப்படை
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தபோது அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவன் மாணவிக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்தான் என்று கூறப்படுகிறது.
அதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு மாணவி வேறு பள்ளியில் சென்று 12ஆம் வகுப்பில் சேர்ந்துகொண்டார். ஆனாலும் தொடர்ந்து மன உளைச்சலோடு காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மிதுன் சக்ரவர்த்தியின் அத்துமீறல் குறித்தும் அதன் காரணமாகவே மகள் தற்கொலை செய்துகொண்டார் என்றும் மாணவியின் தந்தை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் மிதுன் சக்ரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவிலும் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனிடம் மாணவி பலமுறை புகாரளித்தார் என்றும் ஆனால் அந்தப் புகாரின் மீது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே மீரா ஜாக்சனையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சின்மயா பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
Comments