தலைநகரை உலுக்கும் காற்று மாசு... ஊரடங்கை அமல்படுத்தலாமா? - உச்சநீதிமன்றம்
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், வீட்டில் கூட மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டிருப்பதாக ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, காற்று மாசை தீவிரமான பிரச்சனை என குறிப்பிட்ட நீதிமன்றம், மாசுபாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியது.
தற்போது மோசமான நிலையிலுள்ள காற்று மாசுபாட்டின் அளவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேலும் மோசமாக வாய்ப்புள்ளதாகவும், 3 நாட்களுக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், 2 வாரங்களுக்கு முன் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காற்று மாசுபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வைக்கோல்களை எரிப்பது தொடர்பாக சந்தையில் பல இயந்திரங்கள் உள்ள நிலையில், அதனை வாங்க இயலாத விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மாசுபாட்டிற்கு விவசாயிகளை மட்டுமே குறை கூறுவதை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், வீட்டில் கூட மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தது.
இந்நிலையில், காற்று மாசை குறைப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி மத்திய அரசு திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Comments