குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. உதவியை எதிர்பார்க்கும் நரிக்குறவர் இன மக்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதி மழை நீரால் நிரம்பி வழிகின்றது. தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நிற்கக்கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். மேலும் தாங்கள் எங்காவது சென்று தஞ்சம் அடையலாம் என்று பார்த்தாலும், யாரும் உதவுவதில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்
இரண்டு நாட்களாக பொன்னேரி ரயில் நிலையத்தில் உறங்கிய நரிக்குறவர்களை அங்கிருந்து துரத்தப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் சாலைகளில் நிற்கின்றனர். வசிப்பதற்கு வீடும் இல்லை நிற்பதற்கு இடமும் இல்லை என்று அவர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
அனைத்து பகுதிகளிலும் வசிக்கக்கூடிய தங்களை போன்ற வாழ்வாதாரம் இல்லாதவர்களை கண்டறிந்து அரசு உதவ வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இவர்களுக்கு புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் சரியான முறையில் கட்டப்படாததால் வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதுடன், புதிய வீட்டின் தாழ்ப்பாளை கூட தங்களால் பூட்ட முடியவில்லை என்கின்றனர்.
இதற்கிடையில் ஒப்பந்ததாரர் கட்டுகின்ற வீட்டிற்கு பாதி பணத்தை தாங்கள்தான் கொடுத்ததாகவும், ஆனால் இவர்கள் இப்படி வீடுகளை தரமின்றி கட்டினால் எங்கு சென்று வாழ்வது என்று இவர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
Comments