வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் ; அழையா விருந்தாளிகளாக வீடுகளுக்கு வந்த பாம்புகள்

0 3502
வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் ; அழையா விருந்தாளிகளாக வீடுகளுக்கு வந்த பாம்புகள்

சென்னை மணலிப் புதுநகரில் மழை நீர் வடிகால் முறையாகப் பராமரிக்கப்படாததால், மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. அழையா விருந்தாளியாக பாம்புகள் மற்றும் எலிகள் வீடுபுகுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 ஆகிய வார்டுகளையும், மாதவரம் மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய நகரப் பகுதி மணலிப் புதுநகர்..!

பெருநகர திட்டக் குழுமத்தால் பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால், அகன்ற சாலைகள், மின்விளக்குகள் என முறையாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரப்பகுதி, தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியால் மழைவெள்ளத்தை வடியவிடாமல் தெருவுக்குள் தேக்கி வைத்திருக்கும் அவலத்திற்குள்ளாகி உள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் மழைநீர்க் கால்வாயின் இருபக்கமும் கரைகளைக் கரைத்து குடிசைகளையும், கட்சி அலுவலகங்களையும் அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு பக்கம்..!

மழை நீர் வடியாமல் உள்ள அரசு பள்ளிக்கூடம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட நகரின் தாழ்வான சாலைகளை பெரு வெள்ளமாக சூழ்ந்திருக்கும் காட்சி மறுபக்கம்..!பெரும்பாலான தெருக்களில் காலி நிலங்களில் தேங்கிய மழை நீர் சாலைகளில் புகுந்து நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்து கொண்டது.

சாலைகளில் சூழ்ந்த வெள்ளத்தில் அழையா விருந்தாளிகளாக, பாம்புகள், எலிகள், தவளை, தேள், பூரான் உள்ளிட்டவை வீட்டிற்குள் வந்தன. இதனால் அவற்றை தடுப்பதற்காக பெரும்பாலான வீடுகளில் முன்பக்க வாசலில் துணிக்குவியலை வைத்து கதவுகளை அடைத்து வைத்தனர்

வழக்கமாக இங்கு மழைகாலத்துக்கு முன்பாக முழுமையாக கால்வாய்கள் தூர்வாரப்படுவது வழக்கம் . இந்த முறை கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதால் கால்வாய்களை தூர்வார இயலாமல் போனதால், மழை நீர் தேங்கிய பின்னர் புதிய கால்வாய்களை வெட்டி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

வைகுண்டபுரம், எலந்தனூர், உள்ளிட்ட பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ஃபேஸ் ஒன் மற்றும் ஃபேஸ் டூ ஆகிய பகுதிகளில் வீடுகளை சுற்றிய மழை நீரை அகற்றுவதற்காக, பல கோடி ரூபாய் மதிப்பில் அண்மையில் போடப்பட்ட புதிய சாலைகளை உடைத்து தற்காலிக வடிகால் அமைக்கப்பட்டது.

அரசு திட்டமிட்டு வடிவமைத்த நகரில் நீர்வழிப்பாதையை தடுக்கும் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, மழை நீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments