நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்

0 29667
நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும், வட தமிழக கடற்பகுதிக்கும் இடையே சென்னைக்கு அருகே நேற்று மாலை கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையேறிய போது, தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவிழக்கும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னைக்காக விடப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சென்னையில் கனமழை மற்றும் காற்றுக்கான ரெட் அலெர்ட் தொடர்ந்து இருக்கும் என்றும், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 13-ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments