கடலூர் மாவட்டத்தில் கனமழை.. விளைநிலங்களைச் சூழ்ந்த தண்ணீர்..!
கடலூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் தரைப்பாலங்கள் உடைந்த நிலையில், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கனமழை காரணமாக மணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெருந்துறை கிராமத்தில் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பில் சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பக்கவாட்டு கரையும் நீரின் ஓட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மெல்ல மெல்ல கரைந்து வருகிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண்ணானது கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையில் கரைந்து, வடிகால்வாய்களை ஆக்கிரமித்ததில், 3க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளதோடு, சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காட்டுமன்னார்கோவில் அடுத்த வெண்ணங்குழி ஓடை வழியாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. வீராணந்தபுரம் அருகே திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிகமாக அதன் அருகில் வாகனங்கள் செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
வெள்ளப்பெருக்கில் இந்தத் தற்காலிகப் பாலம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் திருச்சி - சிதம்பரம் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால், மேட்டுப்பாளையம் கிராமத்திற்கும் கூ.கள்ளக்குறிச்சி கிராமத்திற்கும் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments