மழையால் சென்னை நகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னையில் பெய்து வரும் மழையால் நகரின் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து மேற்கு மாம்பலம் மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், நகரின் சிலப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பெரம்பூர் பேரக்ஸ் ரோடு - ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும், கே-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில், தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாஸ்திரி நகர் சந்திப்பில் இருந்து அடையாறு சிக்னல் செல்லும் இலகு ரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் வேறு பாதைக்கு திருப்பிவிடப்படுவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments