தொடர் கனமழை காரணமாக நிரம்பிய ஏரிகள்.. வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி..!
மாதவரம்
கனமழை காரணமாக ரெட்டேரி நிரம்பிய நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் அறிஞர் அண்ணா நகரில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தொடர் மழையால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில், கொளத்தூரில் உள்ள ரெட்டேரி நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நீர் அறிஞர் அண்ணா நகரில் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இந்த மருத்துவமனை முன் 3 நாட்களாக மழை நீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்பாக்கம்
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக கீழ்பாக்கத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. அதன் காரணமாக வாகனங்கள் மழை நீரில் மூழ்கிய நிலையில், மழை நீரை மின் மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர்.
பட்டாபிராம்
சென்னை அடுத்த பட்டாபிராமில், சில இடங்களில், மழை நீர் 3 நாட்களாக வடியாமல் உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தொடர் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி
தொடர் மழை காரணமாக கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதன் காரணமாக திருக்கோவிலூரில் இருந்து ஆலூர், மொகளார், நத்தாமூர், கிளியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் 15 கிலோமீட்டர் சுற்றி திருக்கோவிலூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆபத்தை உணராமல் சிறுவர்கள் சிலர் தரைப்பாலத்தில் உள்ள தண்ணீரில் குளித்து விளையாடினர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கனமழையால் ஏரி நிரம்பி கரை உடைந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மங்கலம்பேட்டை அடுத்த மாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியது.
ஏரியின் கரைகள் பலமில்லாமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கரை சீரமைக்கவும், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரூர்
கரூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைப் பகுதி மற்றும் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் விநாடிக்கு 520 கன அடி தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை சாதகமாக பயன்படுத்தி திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகள் கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆற்று நீர் பச்சை மற்றும் சிகப்பு நிறங்களாக மாறி செல்கிறது.
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டுக்கு வரும் 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுவதால் 26 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாகவும் ஆந்திர மாநிலம் சித்தூர் கலவ குண்டா அணை நிரம்பி அதிலிருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அண்ணா சாலை
தொடர் கனமழை காரணமாக சென்னை அண்ணா சாலையில் 100 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது. தொடர் மழையால் சென்னையில் 3 நாட்களாக பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
கொரட்டூர்
சென்னை கொரட்டூர் ரயில்வே குடியிருப்பைச் சுற்றி கழிவு நீரோடு மழைநீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வருவதாகக் கூறுகின்றனர். பழமையான அந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் முழங்கால் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தண்ணீரில் இறங்கியே குடியிருப்புப் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கழிவுநீர் கலந்திருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று கூறும் அவர்கள், நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியிலும் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் தவிப்பதாகக் மக்கள் கூறுகின்றனர்.
Comments