தீவிரமடைந்துள்ள பருவமழை.. நிரம்பி வழியும் நீர்நிலைகள்..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து, அணைகள், ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் 11 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேல் ஆழியாறு அணையிலிருந்து வினாடிக்கு 240 கன அடி நீர் ஆழியாறு அணைக்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 11 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சீறிப்பாய்ந்து வருகிறது. இதனையடுத்து ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அந்த நீர் அப்படியே கிளியாற்றில் திறந்துவிடப்படுகிறது. திருவண்ணாமலை மற்றும் கனஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது.
ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், ஏரிக்கு வரும் நீர் 110 தானியங்கி ஷட்டர்கள் மற்றும் கலங்கள் வழியாக கிளியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை பேரிடர் பார்வையாளர் சம்மந்த மூர்த்தி, அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
Comments