அண்ணா.. அண்ணா.. பெண் போலீசாரை கெஞ்சவிட்ட போதை போலீஸ்..! எஸ்.பி ஆபீஸ் முன்பு அலப்பறை
கரூரில் மது அருந்தியபடி கார் ஓட்டிவந்த போலீஸ்காரர் ஒருவர், வரிசையாக இருசக்கர வாகனங்களை இடித்துக் கொண்டு வந்ததால், காருடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லவந்த போலீசாரையும் பொதுமக்களையும், ஆபாசமாகப் பேசி, அடிக்கப் பாய்ந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திங்களன்று மாலையில் தனது ஸ்விப்ட் காரை எடுத்துக் கொண்டு கரூரிலிருந்து தாந்தோன்றிமலையைக் கடந்து நீதிமன்றம் வழியாக சென்றபோது, தாந்தோன்றிமலை, காளியப்பனூர், நீதிமன்றப் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகின்றது. பொதுமக்கள் விரட்டிச் சென்று நீதிமன்றப் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸ்காரர் ஓட்டிச்சென்ற காரை மடக்கிப்பிடித்தனர்.
காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டே சென்ற லோகனாதன், அங்கிருந்த பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தார். மேல் சட்டையை கழற்றிவிட்டு வம்பு செய்ய ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் அவரை அழைத்துச்செல்ல வந்த போலீஸ் ஏட்டு எச்சரித்தபோது, அவரையும் ஆபாசமாகப் பேசி அடித்துத் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இந்த காட்சிகளைப் படம் பிடித்தவரின் செல்போனை சகபோலீசார் கைப்பற்ற, அங்கிருந்த யாரையும் படம் பிடிக்கவிடாமல் பெண் போலீசாரைக் கொண்டு விரட்டினர்.
போதையில் ரகளை செய்த போலீஸ்காரர் லோகனாதனோ சாலையே அவருக்கு சொந்தம் என்பது போல தள்ளாடியபடி ஆபாச அலப்பறையில் ஈடுபட்டார்.
போதையில் ஆபாசமாக வசைபாடிக் கொண்டிருந்த லோகனாதனை அழைத்துச் செல்ல, ஆண் காவலர்களால் இயலாத நிலையில், அவரை அமைதிப்படுத்தி அழைத்துச்செல்ல பெண் போலீசை அனுப்பிவைத்து, சீருடையில் வந்த போலீசார் விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
'அண்ணா அண்ணா' என்று பெண் போலீஸ் மன்றாடியும் அந்த போதை போலீஸ், காட்டுப்பூச்சி போலக் கட்டுப்படாமல் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக அலம்பலில் ஈடுபட்டார்.
நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அரங்கேறிய லோகனாதனின் நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானதால் , மது பாட்டில் மற்றும் சைடிஸ் உடன் அந்த காரை பறிமுதல் செய்த தாந்தோன்றிமலை போலீசார், லோகநாதனுக்கு போதையைத் தெளிய வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments