தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி இருந்து வரும் நிலையில், தென்கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழை காரணமாக தியாகராய நகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வியாசர்பாடி, போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
நேற்றிரவு சற்று மழை ஓய்ந்தாலும் மேற்கண்ட பகுதிகளில் மழை நீர் வடியாத நிலை காணப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களுக்கு அதிகன மழை குறித்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments