மழையால் பாதிப்புக்குள்ளான சென்னை... குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர் !
சென்னை பெருநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ததை அடுத்து, ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளின் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மகாகவி பாரதிநகர் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து, ஜீவா ரயில்வே சுரங்கப்பாலத்தில் சிக்கியது. குளம் போல் சுரங்கப்பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கித் தத்தளித்த பேருந்து, கயிறு கட்டி மீட்கப்பட்டது.
சென்னை வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தியுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் இருந்த கடைகளும் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனை அடுத்து மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சென்னை மாநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது.
தொடர் மழை காரணமாக கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகள் மழைநீரில் தத்தளிக்கின்றன.
சென்னை கே.கே.நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி அவதிக்குள்ளாகினர்.
சென்னை ஓட்டேரியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து தத்தளித்த நபரை காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை தியாகராய நகர் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் மழை நீரில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடினர். அப்பகுதியில் இருந்த கோவில் குளம் நிரம்பியதை அடுத்து மீன்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.
Comments