15 மரங்களை வெட்டுவதற்கு வனத் துறை அனுமதி, கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது என்றும், இப்போது கிடைத்துள்ள அனுமதி இந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்க தமிழ்நாட்டுக்கு உதவும் என முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அணையை வலுப்படுத்தி, அதன் கீழ்ப்பகுதியில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு உறுதிப்படுத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் வண்டிப்பெரியாறு மற்றும் பெரியாறு அணைப்பகுதிக்கு இடையே உள்ள சாலையை சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரி உள்ள மு.க.ஸ்டாலின், அணை பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இந்த சாலைப் பணிகள் அவசியம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Comments