காதல் ஜோடியை மதம் மாறச்சொல்லி கொலைவெறித் தாக்குதல்..! சிசிடிவி காட்சி வெளியானது
காதல் திருமணம் செய்த ஜோடிகளை சேர்த்து வைப்பதாக தேவாலயத்துக்கு அழைத்துச்சென்ற மருத்துவர் ஒருவர், மதம்மாற மறுத்ததாகக் கூறி, காதலனை வீதியில் விரட்டி விரட்டித் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் சிறையின்கீழ், ஆனத்தலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன்கிருஷ்ணா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தீப்தி என்ற 22 வயது இளம் பெண்ணும் கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து, கடந்த 31 ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி, பொணாக்காட்டில் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தீப்தியின் பெற்றோர் தங்கள் மகளை, மிதுன் கிருஷ்ணா கடத்திச்சென்றுவிட்டதாக சிறையின்கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தங்கள் இருவரையும் தேடுவதையும் அறிந்த இளம்ஜோடியான மிதுன் கிருஷ்ணாவும், தீப்தியும் போலீஸ் நிலையத்தில் ஆஜராயினர். தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்த தீப்தி, தான் மேஜர் என்பதால் காதல் கணவருடன் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் காதல் திரைப்படத்தில் வரும் சித்தப்பா போல பாசமாகப் பேசி, மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த தீப்தியின் சகோதரர் டேனிஷ், "நடந்தவற்றை மறந்து இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம், எப்படி கோவிலில் வைத்து தாலி கட்டினீர்களோ ? அதேபோல தேவாலயத்தில் வைத்தும் திருமணம் செய்து வைக்கிறேன்" என்று கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
அங்குவைத்து மிதுன் கிருஷ்ணாவை, தங்கள் மத வழக்கப்படி பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சம்மதிக்காமல் மிதுன்கிருஷ்ணா தனது காதல் மனைவியை அழைத்துக் கொண்டு தேவாலயத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டேனிஷ், தங்கள் வீட்டுப்பெண்ணை ஏமாற்றி தாலி கட்டியதோடு, தற்போது தங்கள் மதத்துக்கு மாறுவதற்கும் மறுக்கிறாயா ? எனக்கேட்டு மிதுன் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மருத்துவர் டேனிஷ், மிதுன் கிருஷ்ணாவை விரட்டி விரட்டி வீதியில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் கழுத்துப்பகுதியில் பலத்தகாயம் அடைந்த மிதுன் கிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தீப்தி குற்றஞ்சாட்டினார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் டேனிஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர்.
மதம்மாற சம்மதிக்காத காதலனை காதலியின் சகோதரர் ஓடவிட்டுத் தாக்கிய இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments