போலீஸ் விரட்டியதால் கூவம் ஆற்றில் குதித்தவர் பலி..! உறவினர்கள் திடீர் போராட்டம்..!

0 4216
போலீஸ் விரட்டியதால் கூவம் ஆற்றில் குதித்தவர் பலி..! உறவினர்கள் திடீர் போராட்டம்..!

சுடுகாட்டில் பணம் வைத்து சூதாட்டம்  ஆடிய கும்பலை போலீசார் விரட்டிய போது தப்பி ஓடியவர் , கூவம் ஆற்றில் குதித்து  பலியான சம்பவம் சென்னையை அடுத்த பட்டாபிராமில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கூவத்தில் குதித்து பலியானவரின் உடலை பலமணி நேரமாக போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளியான இவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் சரவணன் தனது 7 நண்பர்களுடன் சுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து பட்டாபிராம் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு வந்துள்ளனர்.

போலீசாரை கண்டதும் பயந்து போன சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் சீட்டுக்கட்டு கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் சரவணன் மட்டும் சுடுகாட்டு அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். போலீசாருக்கு பயந்து குதித்த வேகத்தில் சகதிக்காடாக கிடந்த கூவம் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு அவரும் நண்பரை காப்பாற்ற கூவத்தில் குதித்து தேடினார் ஆனால் சரவணனை மீட்க இயலவில்லை.

இதனை அடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தீயணைப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் அங்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனை தண்ணீரில் தேடினர். மேலும், தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சரவணனை மீட்க முடியவில்லை.

இருள் சூழ்ந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தங்களது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வெளக்கு வெளிச்சத்தில் கூவம் ஆற்றில் சரவணனின் சடலத்தை தேடினர். மாலை 3 மணியில் இருந்து தேடிய நிலையில் கூவம் ஆற்றில் அல்லி கொடிகளுக்கு இடையே சிக்கிய நிலையில் கிடந்த சரவணனின் சடலத்தை இரவு 8:30 மணிக்கு தீயணைப்புத்துறையினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

ஏற்கனவே காவல்துறையினர் மீது கடும் கோபத்தில் இருந்த அப்பகுதி மக்கள் , சரவணனின்சடலத்தை உடல் கூறாய்வுக்கு கொடுக்க மறுத்து போராட்டத்தில் குதித்தனர். கஞ்சாவியாபாரிகளை விரட்டி பிடிக்காத போலீஸ், விடுமுறை நாளில் பொழுது போக்கிற்கு சீட்டு விளையாடியவர்களை கூலி தொழிலாளிகளை விரட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அரைமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சரவணனிடம் சடலத்தை பிணகூறாய்வுக்காக ஒப்படைத்த அப்பகுதி மக்கள், கூலித்தொழிலாளி சரவணனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சடலத்தை ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தனர். சரவணனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவர்களது வீட்டுக்கு வெளியே கண்ணீர் விட்டு கதறியபடி இருந்தனர்.

சரவணனின் உடல் பிணகூறாய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments