அலட்சியப்படுத்த வேண்டாம்.. ஆபத்தில் சிக்க வேண்டாம்.. எச்சரிக்கும் தீயணைப்புத்துறை..!

0 4524
அலட்சியப்படுத்த வேண்டாம்.. ஆபத்தில் சிக்க வேண்டாம்.. எச்சரிக்கும் தீயணைப்புத்துறை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அருவியில் குளிக்கச் சென்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

செங்கம் அடுத்த குப்பநத்தம் துரிஞ்சாபுரம் அருகே வனப்பகுதியில் "நாமக்கல் நீர்வீழ்ச்சி" என்ற பெயரில் சிறிய அருவிப் பகுதி உள்ளது. விடுமுறை தினங்களில் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து பொழுது போக்குவது வழக்கம்.

தீபாவளி விடுமுறை என்பதால், குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர். மதியம் திடீரென காட்டுப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு தொடர் கனமழை பெய்துள்ளது.

இதில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் மறு கரைக்கு வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

கயிறு ஒன்றைக் கட்டி, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். மீட்புப் பணியின்போது இளைஞர் ஒருவரின் கால் வழுக்கி மீட்புப் படை வீரரோடு சேர்ந்து கீழே விழுந்தார்.

தமிழகம் முழுவதுமே வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. நீர்வரத்தின் அளவு எந்த நேரத்தில் அதிகரிக்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளதால், அதுபோன்ற பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு தரப்புகளில் இருந்தும் எச்சரிக்கைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஆனாலும் ஒரு சிலர் செய்யும் அலட்சியத்தால் உயிரிழப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்றும் எனவே எச்சரிக்கையாக இருக்குமாறும் அரசு அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments