உலகமே வியக்கும் இந்தியாவின் கலாச்சார பெருமை
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார பெருமைகளை உலகமே வியந்து பார்ப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற பிரதமர் மோடியை, மாநில ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புனிதலமான கேதார்நாத் சென்றார்.
இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மோடி வழிபாடு நடத்தினார். 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 8வது நூற்றாண்டை சேர்ந்த ஆதிசங்கராச்சாரியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் 12 அடி உயரமுள்ள அவரது சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.
2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெருவெள்ளத்தில், ஆதிசங்கராச்சாரியார் நினைவிடம் சேதமடைந்ததை அடுத்து தற்போது புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு வழிபாடு நடத்திய மோடி சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.
பின்னர் யாத்ரீகர்களின் வசதிக்காக 130 கோடி ரூபாய் மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்றார்.
தீர்த்த யாத்திரை முலம் நமது கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச்சார பெருமைகளை உலகமே வியந்து பார்ப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
கோதார்நாத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, சில ஆன்மீக அனுபவங்களை விவரிக்க முடியாது என்று தெரிவித்தார்.
Comments