நாட்டு பட்டாசு வெடித்து பயங்கரம்.. அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்..!
தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையான கோட்டகுப்பம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடித்ததில், 7 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்த கலைநேசன் நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் பட்டாசு கடையும் வைத்திருந்தார்.
தீபாவளியையொட்டி தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது மனைவியை பார்ப்பதற்காக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதிக்கு 7வயது மகனுடன் யமஹா ஃபேசினோவில் சென்றுள்ளார். அப்போது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக நாட்டு பட்டாசுகளை ஒரு சாக்கு பையில் போட்டு ஸ்கூட்டரின் முன்பு வைத்த கலைநேசன், அதன் மீது மகனை அமர வைத்து கூட்டிச் சென்றுள்ளார்.
கிழக்குக் கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்த போது, தமிழக எல்லைப் பகுதியான கோட்டகுப்பம் பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நெடுஞ்சாலையில் ஏறி குறுக்கே வந்துள்ளது. இதனை எதிர்பாராத கலைநேசன் அந்த வாகனத்தின் மீது மோதிய நிலையில், வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் உராய்வு காரணமாக வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது.
இதில் ஸ்கூட்டரின் முன்னால் அமரிந்திருந்த சிறுவன் மற்றும் கலைவேந்தன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சலாவுதீன், கணேசன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீசாரும் வெடிவிபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
சிறிய உராய்வு ஏற்பட்டாலே எளிதில் வெடிக்கக்கூடிய நாட்டு பட்டாசுகளை எந்தவித பாதுகாப்புமின்றி சாக்கு பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதோடு, மகனை அதன் மீது அமர வைத்து கூட்டிச் சென்ற விபரீத முடிவால் இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments