பாண்டியன் ஓட்டல் பிரியாணியில் கோழி இறகு... ரசாயன வர்ண சிக்கன் பறிமுதல்....
சென்னை வானகரத்தில் உள்ள பாண்டியன் ஓட்டலில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் கோழி இறகு கிடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், உடலுக்குக் கேடுவிளைவிக்கும் வர்ணம் கலக்கப்பட்ட கோழி இறைச்சியைக் கைப்பற்றிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை குப்பையில் கொட்டினர்.
சென்னை வானகரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டல் பாண்டியன் என்ற அசைவ உணவகம் உள்ளது. இங்கு நண்பர்களுடன் உணவருந்த சென்ற இளைஞருக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணிக்குள் இருந்த சிக்கன் துண்டுடன் கோழியின் இறகு ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து சர்வரிடம் கேட்ட போது அவர் முறையாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
சிக்கன் பிரியாணிக்கு கோழி இறைச்சியை சரியாக நீரில் அலசாமல் இறகுடன் கொட்டிவிட்டதாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்த நிலையில்,ஓட்டல் உரிமையாளரும் உரிய பதில் சொல்லாததால், உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், திறந்துவைக்கப்பட்டிருந்த கோழிக்குருமாவை பரிசோதித்தனர். உணவுப் பொருட்களை திறந்து வைத்து பரிமாறக்கூடாது என்று எச்சரித்தனர்.
உடலுக்கு கேடுவிளைவிக்கும் ரசாயன சிவப்பு வர்ண நிறமூட்டி பவுடர் போட்டு சிக்கன் பொறித்துக் கொடுப்பதை கண்ட அதிகாரிகள், வர்ணப்பொடி கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அதனையும் அந்த கோழி இறைச்சியையும் கைப்பற்றி குப்பையில் கொட்டினர்.
இதே போல கவனக்குறைவாக உணவகம் நடத்தப்பட்டால் உணவகம் இழுத்து பூட்டி சீல்வைக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துச்சென்றனர். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வாரந்தோறும் சுழற்சி முறையில் அனைத்து உணவகங்களையும் சோதனை செய்தால் மட்டுமே சிக்கனில் நிறமூட்டி கலப்பதை தடுக்க இயலும் என்பதே கசப்பான உண்மை..!
Comments