லைக்கா சுபாஷ்காரனை கோவிலுக்கு கூட்டிச்சென்ற பா.ம.கவின் ஜி.கே மணி… கேரவன்களால் விதிமீறல் புகார்!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், லைக்கா நிறுவன சேர்மன் சுபாஸ்கரன், விதியை மீறி கேரவன் வாகனத்துடன் கோவில் வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சுபாஸ்கரனை அழைத்துக்கொண்டு பா.ம.க தலைவர் ஜி.கே மணி உடன் சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கங்களுக்கு தீவிர அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு கருதி பக்தர்களின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோவில்களின் வளாகத்துக்கு அருகே அனுமதிக்கப்படுவதில்லை. இந்த 12 ஜோதிலிங்கங்களில் ராமேஸ்வரம் கோவிலும் ஒன்று என்பதால், கோவில் வரை பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
மேற்கு கோபுரத்திலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு விடும். அப்படியே விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டாலும் முக்கியமான விஐபிகளின் வாகனங்கள் மட்டுமே கோவில் வாசல் வரை அனுமதிக்கப்படும்.
அந்தவகையில் ராமநாத சுவாமி கோவிலுக்கு சாமிகும்பிட வந்திருந்த லைக்கா பட நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்காக விதிகள் தளர்த்தப்பட்டன. அவரது வருகைக்காக விதியை மீறி கோவில் வாசல் வரை இரு கேரவன் வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. கோவிலுக்குள் செல்வதற்காக 5 சொகுசுகார்களும் அனுமதிக்கப்பட்டன.
கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச் சென்ற சுபாஷ்கரனை, பாமக தலைவர் ஜிகே மணி ஆதரவாளர்களுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு சன்னதியாக சுற்றி வந்தார்.கோவிலுக்குள் இருந்த குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள், விஐபிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சுபாஷ்கரனுக்கும் வழங்கி வழிஅனுப்பி வைத்தனர்.
வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து, நடக்க கஷ்டப்படும் வயதான பக்தர்களின் வாகனங்களைக் கூட கோவிலுக்கு அருகில் அனுமதிக்காத கோவில் நிர்வாக அதிகாரிகள், விதியை மீறி சுபாஷ்கரனுக்கு வரவேற்பு அளித்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் ஜி.கே மணியின் மகன், சுபாஷ்கரனுடன் தொழிலில் கூட்டு வைத்திருப்பதால் அவரை எந்த ஒரு தடையுமின்றி சாமி தரிசனம் செய்யவைப்பதற்கு எம்.எல்.ஏவான ஜி.கே மணி அழைத்து வந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Comments